கவிஞர் பன் இறையின் அமைதியும் பயங்கரமும்

இயல்பாய் எல்லாமே
போய்க் கொண்டிருக்கிறது.
அதிர்ச்சியான தொலைபேசி அழைப்புகளில்லை.
குழந்தைகள் எதையும் உயரத்திலிருந்து
தன் மீது இழுத்துக் கொள்ளவில்லை.
திரும்பத் திரும்பக் காட்டப்படும். பேரழிவுக் காட்சிகள் இல்லை.
தலையில் அடித்துக் கொண்டு தெருவில் யாரும் ஓடவில்லை.
எல்லாம் அமைதியாக, சரியாக போய்க் கொண்டிருக்கிறது.
தன் பாதையில் அமைதி எவ்வளவு மெதுவாய் சாதுர்யமாக செல்கிறது.
இது தான் பயங்கரமானது.
பெரும்புயலுக்கு முன் கடல், தரை யாவும் அளவிற்கு அதிகமான அமைதியோடிருப்பதாகத் தெரியும். தாகூரின் ‘புயல்’ நாவலில் கூட அமைதி திரும்பி அங்கே விவரிக்க முடியாத ஒரு பயங்கரம் தொற்றி நிற்கும் புயலுக்குப்பின் அமைதி என்பது பேச்சிற்குத்தான்.
தொண்ணூறுகளில் கட்டுடைதல் பற்றி நிறையப் பேசப்பட்டது.
இங்கே கொஞ்சம் சுயபுராணம் பாடலாம். முன்றில் அலுவலகத்திற்கு முக்கியமான நவீன இலக்கிய கர்த்தாக்கள் வருகையில் மேற்படி கட்டுடைதல் பற்றி விவாதம் நடக்கும். கவிஞர் பழமைலையிலிருந்து இந்திரன், சாருநிவேதிதா, நாகார்ஜீனன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ரவிக்குமார், தமிழவன், அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றோர் சந்திக்கையில் அநேகமாக எல்லாராலும் பேசப்படும்.

சிறு கருத்து வேறுபாடுகளால், விஷயம் பாழடிக்கப்பட்டுவிடாது.

“ஏற்கனவே இந்த கட்டமைப்பு உடைந்து ஏற்பட்டதுதானே இப்போது இருக்கும் கட்டமைப்பு” என்று கவிஞர் பிரமிள் எழுதினார்.

கடல் கொந்தளிப்பும் தரைக்காற்றும், சூறாவளியும் பயங்கரம்தான். அமைதி திரும்பும் என்று நினைத்துக் கொண்டிருப்பது, அமைதி நிலை கொள்ளும் போது இது பயங்கரத்திற்கு அறிகுறி என்று இருப்பதும் ஒன்றுதான்.

இம்மாதிரி நிலையை சில கலைஞர்கள் திரைப்படங்களில் காட்ட முயற்சி செய்துள்ளனர்.

கவிஞர் பன் இறை மிகவும் வெளிப்படையாக இதைக் கையாள்கிறார். இதுவே நல்லது என்று முடிவு செய்யப்படும்போது அது அல்ல என்ற கருத்தும் பிறந்துவிடுகிறது.
நகுலன் இதை வேறுவிதமாக கூறியிருக்கிறார். நவீன இலக்கிய விமர்சகர்களும் பல்வேறு விதத்தில் விளக்கம் தருகின்றார்.

சரி பலரும் சொன்ன ஓர் உண்மையை சொல்லிவிடுவது கவிதையாகிவிடுமோ என்றால், இல்லை, கவிஞர் இந்தக் கவிதையில் அது எவ்வளவு சாதுர்யமாகச் செல்கிறது என்று அதிசயிக்கிறார்.

மதுகர என்று ஒரு வண்டை அழைத்து காளிதாசன் கவிதை சொல்கிறது.

“நாங்கள் எல்லாம் உண்மையைத் தேடி வீணாய் போனோம். நீயல்லவா அதைக் கண்டுவிட்டாய்”.

நீ தான் அதைக் கண்டுபிடித்தாய் என்றிருந்தால் அது கவிதையாகத் தோன்றுமா?

அதிசயப்படுகையில் அங்கு விஷயங்கள் எல்லாம் போய் – அறிவு எல்லாமற்று – மௌனம் நிலவுகிறது. கவிதையின் முடிவு மௌனம் தானே.

கவிஞர் பன் இறை அவர்களின் "பருந்துகளைப் போலான தேன் சிட்டுகள்" தொகுப்பில், மேற்படி அமைதி என்ற கவிதை சிறப்பாகத் தெரிகிறது.

- மா.அரங்கநாதன்01.06.12
http://www.maaranganathan.com

தாரா கணேசனின் ஒரு கவிதை


இறுக வாய் கட்டப்பட்ட
பாலீதின் உறையை
முகத்திற்கு நேரே
தூக்கிப்பிடிக்க
கொடுத்திருந்த மீன்கள்
குறு வட்டமிட்டு
மிரண்டலைகின்றன
தம் இடமாற்றத்தின்
காரணம் புரியா
சிறைச்சாலை கைதியென
…….
கனக்கிறது
கையிலிருக்கும் உறை”
மீன், மீன் உணவு பற்றி யாராவது நல்ல எழுத்தாளர் எழுதியிருந்தால் கூட அந்தப் பகுதியை தள்ளிவிட்டே படிப்பேன்” என்று க.நா.சு எழுதியிருந்தார். அப்படிப்பட்டவர் டில்லியிலோ வேறு எங்கோ “புலவு” உணவை ருசி பார்த்ததாகவும் ஒரு தடவை தெரிவிதிருக்கிறார்.

நான் காய்கறி உணவுவாதி. மாமிசம், மீன் உணவு வகைகளைப் பார்த்தது கூட இல்லை. பெரிய வீடுகளிலோ உணவு விடுதிகளிலோ உள்ள கண்ணாடித் தொட்டிகளில் வலம் வரும் மீன்கள், இந்தக் காரணத்தால்தான் என்னைக் கண்டு அஞ்சாமல் பக்கத்தில் வந்து உற்றுப் பார்க்கின்றனவோ என்று இறுமாந்திருக்கிறேன்.

இடமாற்றத்தின் காரணம் புரியாது. அதாவது இடமாற்றம் போன்ற விஷயங்களை இந்த மீன் போன்ற உயிர்கள் எண்ணிப் பார்ப்பதாகவே வைததுக் கொள்வோம் - சரி. ஆனால், இந்த மிரளுதல் என்பது ஓர் உணர்வு – உயிரின் உணர்வு அது. உயிரின பிரச்சனை. புரிய வேண்டிய அவசியமில்லை. இந்த மிரளுதல் விஷயத்தில் மீன் மனிதன் என்றெல்லாம் பேதம் இல்லை. உயிரின பரிணாம சமாச்சாரம். அது எங்கேயும் போய்விடாது. மீனோ அல்லது நாமோ போன பின்னரும் இன்னொன்றால் தொடரும் சங்கதி – முடிவே இல்லாத சங்கதி.
பரிணாம வாதம் கவிதையாகி விடாது. ஆனால் இங்கே பிரிவுபசாரமாக – பச்சாதாபமாக அந்த உறை முத்தமிடப்படுகிறது.
கனக்கிறது
கையிலிருக்கும் உறை

பண்டமாற்றமாகப் போகிறதோ பண்டமாகப் போகிறதோ என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் ஒரு விநாடி மனித மனம் என்ற ஒன்று மாசு இல்லாமல் ஆகி அங்கே அருள் என்ற ஒன்றுமில்லாத ஒன்று வியாபித்து நம்மையும் மாற்றி விட்டிருப்பதை அனுபவிக்க முடிகிறது.

கவிஞர் நிறையப் படித்தவர் என்று தெரியவருகிறது. சொல்லவும் படுகிறது. ஆனால் சிறைச்சாலைக் கைதி மீது பரிவு காட்ட எந்த படிப்பம் பயன்பட்டிருக்காது. கவிதை தோன்றும் போது படிப்பாவது அறிவாவது, எல்லாம் மாயை. அது ஒன்றுதான் நிசம். கனக்கிறது கையிலிருக்கும் உறை என்று கூற எது வழிகாட்டியிருக்கும்?

ருதுவனம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் தாரா கணேசனின் கவிதைவரிகள் எனக்குப் பிடித்திருக்கின்றன.


- மா. அரங்கநாதன்